வியாழன், 19 ஏப்ரல், 2012

தெய்வ திருமகள் --தினமலர் 19 .04 .2012

மதுரையில், மனைவியை கொன்று எரித்த வழக்கில், கைது செய்யப்பட்ட மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மார்டின் மான்ட்ரிக்கிற்கும், 6 வயது மகள் அடில்லாவுக்கும், இடையே திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பாசப் போராட்டம் நெகிழச் செய்தது.


மெக்சிகோவை சேர்ந்த மார்டின் மான்ட்ரிக், 40, அதே நாட்டை செசில்லா அகஸ்டா,36, என்பவருடன் 20 ஆண்டுகளாக, திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். இவர்களுக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். பிரிந்து வாழ்ந்த இவர்களுக்கு இடையே, அடில்லாவை யார் வளர்ப்பது என்ற பிரச்னையில், செசில்லாவை ஏப்.,9ல் மான்ட்ரிக் கொன்று, மதுரை தோப்பூர் கண்மாயில் உடலை எரித்தார். நேற்று முன்தினம் மார்ட்டினை போலீசார் கைது செய்தபோது, மகள் அடில்லா தந்தையை விடாமல் அடம் பிடித்ததால், அவரையும் திருநகர் ஸ்டேஷனிற்கு அழைத்து வந்தனர். மார்டினிடம் போலீசார் விசாரித்த போதும், அடில்லா உடன் இருந்ததால், "தங்கள் பாணியில்' விசாரணை செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் பெண் எஸ்.ஐ.,க்களின் பராமரிப்பில் விடப்பட்ட அடில்லாவிற்கு, பழங்கள், பிஸ்கட், பொம்மை, நோட்டு, கலர் பென்சிலர்கள் வாங்கி கொடுத்து சமாதானம் செய்தனர். எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணைக்கு பின், நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு மீண்டும் திருநகர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட மார்டினை பார்த்ததும், அடில்லா ஓடிச்சென்று அவரது தோளில் சாய்ந்தாள். தந்தையும், மகளும் 10 நிமிடங்களுக்கு மேலாக கட்டிப்பிடித்து அழுது கொண்டே இருந்தனர். தந்தையின் கையை பிடித்துக்கொண்டே குழந்தை சென்றது.

""நான் ஜெயிலுக்கு போறேன். பாட்டி, அத்தை வந்தவுடன் நீ, அவர்களுடன் நம் நாட்டிற்கு சென்றுவிடு. என்னை மறந்திடாதே'' என, மார்டின் கூறியபோது, குழந்தை கதறி அழுதது போலீசாரையே கண்கலங்க வைத்தது. நேற்று காலை மதுரை சிறையில் அடைக்க, மார்டினை அழைத்து செல்வதற்கு முன், தான் வரைந்த குழந்தை படத்தை தந்தையிடம் கொடுத்து, "என் ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள்' என அடில்லா கூறியதை கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தனர் போலீசார். தந்தை சிறைக்கு கிளம்பியவுடன், அடில்லா சத்தமிட்டு, தரையில் புரண்டு அழுதாள். தந்தை சிறையில்...தாயும் இல்லை; அந்த மெக்சிகோ குழந்தையின் பாசப் போராட்டத்தை கண்டு எல்லோரும் கண் கலங்கினர்.

புழல் சிறைக்கு மாற்றம்: அடில்லாவை 8 மாத குழந்தையில் இருந்தே மார்டின் வளர்த்து வந்தார். குழந்தை மீது வைத்திருந்த பாசம், மார்டினை கொலையாளியாக்கி உள்ளது. மதுரை விடியல் காப்பகத்தில் உள்ள அடில்லாவை விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மதுரை சிறையில் இருந்து நேற்று மதியம் சென்னை புழல் சிறைக்கு மார்டின் இடமாற்றப்பட்டார். "வெளிநாட்டவரை புழல் சிறையில்தான் அடைக்க வேண்டும்' என்ற உத்தரவால், அவர் மாற்றப்பட்டார்' என மதுரை சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சிறுமி அடில்லா தற்போது மதுரை அருகே உள்ள முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே மதுரையில் சிறையில் இருந்து நேற்று மதியம் சென்னை புழல் சிறைக்கு மார்டின் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.


மதுரை அருகே உள்ள முத்துப்பட்டியில் உள்ள விடியல் காப்பகத்தில் தங்க வைத்துள்ள குழந்தை அடில்லா குறித்து காப்பகத்தின் நிறுவன செயலர் ஜிம் ஜேசுதாஸ் கூறியதாவது:-

குழந்தை அடில்லா நேற்று இங்கு ஒப்படைக்கப்பட்டாள். சில நேரத்தில் அப்பா ஞாபகமாக கேட்கும். உடனே கவுன்சிலிங் நடத்தி சமாதானப்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்ததால் இங்குள்ள உணவான இட்லி சாம்பார், புரோட்டா, சாதம் ஆகிய உணவுகளை சாப்பிடுகிறாள். பழவகைகள் விரும்பி சாப்பிடுகிறாள்.

மேலும் தூங்குவதற்கு ஸ்பெஷல் பெட் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறோம். வீட்டின் வசதிபோல் செய்து கொடுத்து இருப்பதால் நன்றாக சாப்பிட்டு தூங்குகிறாள்.

அப்பாவை பற்றி கேட்கும் போது, “இன்னும் சில நாட்களில் திரும்பி வந்து விடுவார்” என்று கூறும்போது, “இல்லை. அப்பா ஜெயிலுக்கு போவதாக கூறி சென்று இருக்கிறார்” என்று மழலை குரலில் சூதுவாது இல்லாமல் கூறும்போது நம் மனதே வேதனைபடுவதாக இருந்தது.

இந்திய தூதரகம் மூலம் மெக்சிகோ நாட்டில் வசித்து வரும் குழந்தையின் பாட்டி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருகிற சனிக்கிழமைக்குள் இங்கு வரலாம் என எதிர்பார்க்கிறோம். சரியான ஆவணங்களை சரிபார்த்த பிறகு குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பாவமும் அறியாத குழந்தையின் நிலையை கண்டு அங்குள்ள குழந்தைகள் அடில்லாவிடம் அன்பாக பழகுகிறார்கள். காப்பகத்தில் எந்த குறையும் இல்லாமல் ராஜ உபசாரம் செய்யப்பட்டுள்ளதால் அடில்லா அமைதியாக மற்ற குழந்தைகளுடன் விளையாடி வருகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக