செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

தியாகத்தின் திரு உள்ளமா அன்னிய சோனியா... ?


                           தியாகத்தின் திரு உள்ளமா அன்னிய சோனியா... ?

                                                       

<>பி.எஸ்.ராஜேஷ்





( ஜூன் 10,2004----திண்ணை)



வெகுஜன பத்திரிகைகளும், அறிவு ஜீவிகளும் பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்த சோனியாவின் செயலை ஆக..ஓகோ...என வழக்கம் போல தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்....கருணையுள்ளம் கொண்டவர், இந்திரா காந்தி சுடப்பட்ட போது உயிரை துச்சமென மதித்து ஓடோடி வந்தார்(உயர்ந்த ஆன்மா)....பதவி ஆசை இல்லாதவர்....ராஜிவ் காந்தியை கொன்ற பெண் தீவிர வாதி நளினி கைக்குழந்தையோடு இருப்பதால் மரணதண்டனையை மன்னித்தவர்....என்றெல்லாம் சொல்லும் இவர்கள் வசதியாக சில விஷயங்களை மறந்து விடுகின்றனர்.


1.இந்திரா காந்தி சுடப்பட்ட போது ,உயிரை துச்சமென மதித்து ஓடோடி வந்தார் என்று ஜோதிர்லதா கிரிஜா எழுதி இருந்தார்....உண்மையெனில் 1971 பாரத-பாகிஸ்தான் போரின் போது இந்தியன் - ஏர்லைன்ஸ் முழு நேர விமான ஓட்டியாக இருந்த ராஜிவ் காந்தியையும் தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு , போருக்கு பயந்து இத்தாலிக்கு பறந்தது ஏன்.... ? அதுவும் இந்தியன் - ஏர்லைன்ஸ் தனது அனைத்து பணியாளரையும் தயார் நிலையில் இருக்குமாறு பணித்த நிலையில் ஏன் தனது குடும்பத்தை மட்டும் அழைத்து கொண்டு இத்தாலி பறந்தார்.... ? அதுவும் பிரதம மந்திரியின் வீட்டில் பாரத நாட்டிலேயே உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள வீட்டில் இருக்கப் பயந்தவர் சோனியா.... மக்களாகிய நாம் எக்கேடு கெட்டும் போகட்டும், தனக்கு தன் குடும்பம் மட்டும் முக்கியம், என்றுதானே நினைத்தார் சோனியா....பாரத மக்களாகிய நாம் பறந்து போக வேறு தேசம் இல்லாமல், ஏனெனில் நமக்குதான் இது தாய் நாடு ஆயிற்றே...மகாகவி பாரதி சொன்ன மாதிரி வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம் இல்லையேல் அனைவரும் வீழ்வோம் என கருதி ,எதிரியோடு போரடி, நூற்றுகணக்கான பேரை இழந்து தாய் நாட்டின் மானத்தை காப்பாற்ற, பாகிஸ்தான் சரணாகதி என்ற செய்தி, அதுவும் பி.பி.சியில் வந்த பின்னரே பாரத நாட்டிற்கு திரும்பியவர் வீர மங்கை அன்னிய சோனியா.. ? ? ? ?

2.அன்னிய சோனியாவின் வீரத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ....1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து , மத்தியில் ஜனதா அரசு அமைந்த போது, எமர்ஜென்சியின் போது இந்திரா காந்தியால் கைது செய்யப்பட்ட தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்து விட்டதால், தங்களை நிச்சயம் பழிவாங்குவார்கள் என்று அதிபுத்திசாலித்தனமாக கணக்கு பண்ணி , உயிருக்கு பயந்து மூட்டை முடிச்சுகளோடு தனது குடும்பத்துடன் புதுடில்லி, சாணகியபுரியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் அடைக்கலமானார் சோனியா காந்தி.... பின் மேனகா ,இந்திரா காந்தி மற்றும் சஞ்சை காந்தி ஆகியோரின் வற்புறுத்தலின் பேரிலே வீடு திரும்பினார்....ஆக என்ன ஒரு வீர மங்கை ...அன்னிய சோனியா.. ?


3.சோனியா பிரதமரானால் சிறிது காலத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பார்கள், மீண்டும் ஒரு தேர்தல் வரும் என நினைத்து, தற்போது பதவி ஏற்கவில்லை என்றால், ஏன் 1999-இல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார்....12-வது லோக்சபா 18 மாதத்திற்குள் கவிழ்க்க சென்னையிலிருந்து மூட்டை முடிச்சுக்களோடு புதுடில்லியின் மெளரியா ஒட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவிடம் தக்க அறிவுரை கூறி 18 மாதமேயான இந்த ஆட்சியை கவிழ்த்து மறுதேர்தல் வரவைத்து பாரதத்தின் பொருளாதாரம் சீர்கெட விரும்பவில்லை என்று சொல்லியிருப்பாரே....ஏன் சொல்லவில்லை.... ?ஒரு வேளை ஒரு ரூபாய் செலவுகூட இல்லாமல் அடுத்த தேர்தல் வரும் என 1-ம் வகுப்பு பள்ளி மாணவனாய் நினைத்திருப்பாரோ.... ?கவிழ்த்தது மட்டுமல்லாமல் அன்றைய ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணனிடம் தனக்கு 272 எம்.பிக்கள் ஆதரவு இல்லாமலே இருப்பதாக பொய் சொல்லி தான் ஆட்சியமைக்க உரிமை கேட்டது ஏன்.. ? பதவி ஆசை இல்லாமலா.... ?

மற்றொன்று, ஜெயின் கமிஷனின் இடைக்கால தீர்ப்பு வந்தவுடனே 1997-இல் தி.மு.க வை ஐக்கிய முன்ணணி ஆட்சியை விட்டு விலக்க வேண்டும் என்று சொல்லி சீதாராம் கேசரிக்கு நிர்பந்தம் கொடுத்து , இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் ஐ.கே.குஜ்ரால் ஆட்சியை கவிழ்த்தது சோனியா தானே....11-ம் லோக்சபாவின் பதவி காலம் முடிய 1 1/2 வருடங்கள் இருக்க பல கோடி செலவில் மீண்டும் ஒரு தேர்தல் நடக்க யார் காரணம்.. ? அடிக்கடி தேர்தல் நடந்தால் பொருளாதாரம் முன்னேறும் என்று சிறு பிள்ளைத்தனமாக சோனியா நினைத்திருப்பாரோ.... ?

4.சோனியா தான் பிரதமராக பதவியேற்காமல் மன்மோகன் சிங் போன்றவரை பிரதமராக்கினால் நன்றாக இருந்திருக்கும் என சில நடுநிலைமைவாதிகள் விரும்பியது அவர் உள்ளுணர்வில் விழுந்திருக்கும் என்றால், உள்ளுணர்வு மன்மோகன் உடனிருக்க ...ஏன் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சந்தித்து தான் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.... ? அப்துல் கலாம் சில விளக்கங்கள் கேட்டிருப்பதாக தானே வெளியில் வந்து பேட்டியளித்தார்....பின் நடந்தது என்ன.. ? காலங்கள் கடந்துதான் சில உண்மைகள் வெளி வரும்..பொறுத்திருப்போம்....


5.எந்த நாடு , எந்த மதம் , எந்த இனம் போன்றவற்றை கடந்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது மட்டுமே முக்கியம் என்ற ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு , பெயர் பெற்ற நிர்வாக திறமைக்காக சிங்கப்பூரின் இரும்பு மனிதர் திரு லீ குவான் அவர்களை , பிரிட்டனின் மார்கிரெட் தாட்சர் அவர்களை, தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இஸ்ரேலின் ஏரியல் ஷெரான் அவர்களை, உலகமெங்கும் கொடிகட்டி பறக்கும் பில் கேட்ஸ் அவர்களை, கருணை மிக்கவர் வேண்டுமென்றால் உலகின் பல பகுதிகளில் அனாதை மற்றும் முதியோர் விடுதிகள் நடத்தும் நபர்களை, வீர மிக்கவர் என்றால் உலக குத்து சண்டை சாம்பியன் மைக் டைசனை, பதவி ஆசையே இல்லாதவர் வேண்டுமென்றால் ஜெர்மனியின் ஹெல்மெட் கோல் போன்றவர்களை உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் பாரத நாட்டிற்கு அழைத்து வந்து பிரதமராக்கி விடலாமே.. ? அப்புரம் ஒரு சரியாக 15 வருடங்களுக்கு பிறகு அன்னிய சோனியாவின் வழியில் இந்திய குடியுரிமை ஆக்கி விடலாம்...பின் ஏன் 1942-இல் காந்தியடிகள் பொழுது போகாமலா வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தினார்... ?

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி செக்கிழுக்க வைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை , தனது மனைவி கர்ப்பிணி என தெரிந்தும் குழந்தையின் முகதை பார்த்து விட்டால் தான் கொண்ட லட்சியம் மாறிவிடும் என நினைத்து சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதன் என்ன முட்டாளா.. ? சின்ன வயதிலே தூக்கு கயிற்றை முத்தமிட்டு செத்து போனானே அந்த பஞ்சாபின் வீர இளைஞன் பகத் சிங் , மண்டையை தடியால் பிளக்கும் போதும் வந்தேமாதரம் என்று சொல்லி தாய் நாட்டின் கொடியை விடாமல் இறுகப்பற்றி உயிர் போன பின் தேசிய கொடியை விட்டானே திருப்பூரின் குமரன், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் என்பவனால் மூடப்பட்ட மைதானத்திற்க்குள் மிருகத்தனமாக் சுட்டு கொல்லப்பட்ட காட்சியை கண்டு , மனம் வெதும்பி அதுவரை நமது நாடு அடிமைப்பட்டதே அறியாத சர்தார் உத்தம் சிங் என்ற படிப்பறிவில்லாத வீர சீக்கிய இளைஞன், பல நாடுகள் சென்று மெக்கானிக் என்ற பெயரில் உலவி, ஜாலியன் வாலாபாக் படுகொலை புகைப்படத்தை தினம் தினம்மனதிற்குள் பார்த்து லட்சியம் தீர்ந்துவிடாமல் வளர்த்து கொண்டு , பல ஆண்டுகள்கழித்து ஜெனரல் டயரை பிரிட்டனில் சுட்டு கொன்றானே இவர்கள் எல்லாம் செய்த செயல் முட்டாள்தனமானதா.. ?,இவர்களை போன்ற எண்ணற்ற வீரர்கள்அன்னியனை விரட்டி இந்த தேசத்திற்கு வாங்கிய சுதந்திரம் என்ன தேவையற்றதா... ? எந்த நாட்டிலும் இந்த கொடுமைநடக்குமோ..தெய்வம்
பார்க்குமோ என பாரதி கதறியது ஒருவேளை இது போன்ற காட்சிகளைத்தானோ.. ?

பாரதம் கர்ம பூமி....புண்ணிய பூமி....முனிவர்களாலும் தேவர்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி இது.... நம் நாட்டில் நல்லவர்கள் , வல்லவர்கள் தேசத்தை வழி நடத்தகூடியவர்கள் பலர் இருக்கின்றனர்....அவர்களை நமக்குவழிகாட்டும் தலைவனாக தேர்ந்தெடுப்போம்....மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, அடுத்து ஒரு வேளை ஒரு கொலம்பியா நாட்டு மாது அல்லது மெக்ஸிகோ மங்கை யாரோ ஒருவர் காங்கிர்ஸின் தலைவராகலாம்...அது அந்த கட்சியின் சாபக்கேடு....காந்தியின் சாபம்....காங்கிர்ஸை கலைக்க சொன்னது நடக்காததால் அது காந்தி சாபம் என்றே எடுத்து கொள்வோம்....ஆனால் நம்து நாட்டின் உயர் பொறுப்பில் அவர்கள் அமர்ந்தால் ,....பாரதத்தின் தேசிய உணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பத்திரிக்கைகளின் கடமை.... நமது துரதிஷ்டம் அந்த பத்திரிக்கை அறிவு ஜீவிகள் தங்களின் லட்சியத்தை மறந்து விட்டு , அன்னியருக்கு துதிபாடுகிறார்கள்....கட்சிகளை மறந்து, மதங்களை கடந்து அன்னியர் யாரும் உயர் பதவியில் அமர்வதை எதிர்ப்பதே த்ங்கள் நல்லுயிரை ஈந்து தேசத்தை காத்த மகாவீரர்களுக்கு நாம் செலுத்தும் ஒரு சிறிய அஞ்சலியாக இருக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக